திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி வகுப்பறைகள் இடியும் அபாயம் : மாணவர்கள் போராட்டம் :

திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் ஒரே ஒரு அரசு ஹோமியோபதி கல்லூரி திருமங்கலத்தில் உள்ளது. இந்த கல்லூரி மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்குவதால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மழை நீர் கசிந்து வந்தது.

கல்லூரி அருகே ஏரி இருப்பதால் அங்கிருந்து வரும் மழை நீர், கல்லூரி வளாகத்தில் தெப்பம்போல் தேங்குகிறது. கல்லூரி விடுதியில் 70 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இந்த விடுதிக் கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததால் விடுதி அருகே மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதுரையில் பெய்த மழைக்கு ஹோமியோபதி கல்லூரி வகுப்பறைகளில் தண்ணீர் கசிந்தது. சில இடங்களில் கட்டிடங்கள் விரிசல் விழுந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அச்சமடைந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் மற்றும் போலீஸார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து கட்டிடத்தை ஆய்வு செய்து புதுப்பிக்க மதிப்பீடு தயார் செய்வதாக உறுதியளித்தனர் இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE