பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதைத்தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமானநிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாநில மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒமைக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து இதுவரை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த 663 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், செலுத்திக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கினாலோ, பெற்றாலோ அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், இணை இயக்குநர் ஜெ.சம்பத்குமார், திருச்சி விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago