மதுரை பழங்காநத்தம் கோவலன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(55), தொழிலதிபர். இவரது மொபைல் போனுக்கு நவ.29-ம் தேதி தொடர்பு கொண்ட இருவர், தங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். நீங்கள் தொழிலில் முறைகேடு செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது. வழக்குப் பதியவிருக்கிறோம் என அவரை மிரட்டினர்.
பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீஸார் எனக் கூறிய இருவரும் வெங்கடேசனின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களிடம் ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லையே, என் மீது எதற்காக வழக்குப் பதிய வேண்டும், என வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ரூ.3 லட்சம் கொடுத்தால் வழக்குப் பதியாமல் விட்டுவிடுவதாகக் கூறினர்.
தற்போது பணமில்லை என்று கூறியதால் வெங்கடேசன் அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தை இருவரும் வாங்கிக் கொண்டு 2 நாளில் பணத்தை தயார் செய்துவிட்டு மொபைல் போனுக்கு அழைக்குமாறு கூறிச் சென்றனர்.
இந்நிலையில், அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த வெங்கடேசன், மதுரை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவிடம் புகார் அளித்தார். விசாரணையில் அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இல்லை எனத் தெரிய வந்தது.
துணை ஆணையர் தங்கத்துரை தலைமையிலான தனிப்படை போலீஸாரின் ஆலோசனையின்பேரில், வெங்கடேசன் சம்பந்தப்பட்ட இருவரையும் மொபைல் போனில் தொடர்புகொண்டு, ரூ.3 லட்சம் தயார் செய்து விட்டதாகவும், எங்கே வந்து கொடுக்க வேண்டும் எனக்கேட்டபோது, அவர்கள் மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள தனியார் விடுதிக்கு வருமாறு கூறினர்.
அதன்படி, பணத்துடன் அங்கு சென்ற வெங்கடேசன், இருவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்தபோது, அருகில் மறைந்திருந்த தனிப்படையினர் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் கோவை மாவட்டம், குனியமுத்தூர் வசந்தம் நகர் அஜி செரீப்(40), திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான் கோவில் ரவிசங்கர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago