நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு, அதிமதுரம் கசாயம் : சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல்

நிலவேம்பு, அதிமதுரம் கசாயத்தை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் கூறியதாவது::

பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடை பிடிப்பது, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது, கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது என அரசு அறிவுறுத்தலின் படி கரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்பு, அதிமதுரம் கசாயத்தை பருகி வருவதால், நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

சித்த மருத்துவ துறை சார்பில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். இதுவரை 16 முகாம்களில் 20 ஆயிரம் பொதுமக்கள் காய்ச்சல், தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்து, மாத்திரை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேம்படிதாளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வெற்றிவேந்தன் கூறியதாவது:

கரோனா தொற்று இரண்டாவது அலை ஓய்ந்து வரும் நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்பு, அதிமதுரம் கசாயத்தை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நிலவேம்பு கசாயத்துடன் அரை ஸ்பூன் அதிமதுரம் பவுடரை கலந்து காலை, மாலை என இருவேளை அருந்தி வர வேண்டும்.

பெரியவர்கள் நிலவேம்பு, அதிமதுரம் கசாயம் வாரத்துக்கு 5 நாட்கள் 60 மில்லியும், சிறியவர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் 30 மில்லி அளவிலும் பருகி வர வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தற்போது, வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவல் அதிகரித்தள்ளது. இக்காய்ச்சல் உள்ளவர்கள் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் எட்டு மூலிகை கூட்டு கலவையில் தயாரிக்கப்பட்ட ‘பிரமானந்தபையிரம்’ மாத்திரை, இஞ்சி சாறு கால் ஸ்பூன், பப்பாளி சாறு, ஆடா தொடை, மணப்பாகு தலா 5 மில்லி அளவில் பருகி வர காய்ச்சல் கட்டுப்படும்.

இரும்பு சத்தை அதிகரிக்க கூடிய மாதுளை, சாத்துக்குடி பழச்சாறை உட்கொள்வதன் மூலம் மழைக்கால காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும். வீடுகளில் பேய் மிரட்டி, நொச்சி இலையை தீயிட்டு கொளுத்தி அதில் வரும் புகையை வீடுகளில் காட்டினால் கொசு வராமல் தடுக்கப்படும். மேலும், கொசு மூலம் பரவும் டெங்கு, மலேரியா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்