மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், வீடுகளின் சேதங்களை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கட்சியினர், விவசாயிகள் ஆகியோர் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கீரப்பாளையம் ஒன்றியம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மழைநீர் தேங்கிகுடிசை வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தற்போது மழை விட்டுள்ளதை பயன்படுத்தி தேங்கியுள்ள மழை நீரை தெருக்களில் இருந்து அகற்ற வேண்டும். வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் இடிந்து உள்ளதையும், இடியும் நிலையில் உள்ள வீடுகளை உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பழைய தொகுப்பு வீடுகளை கூரை வீடுகளாக கணக்கில் கொள்ள வேண்டும். வடஹிரிராஜபுரம் தமிழ்நாடு அறக்கட்டளை நகர் முழுவதும் தண்ணீர் சூழப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாற்று இடத்தில் குடியமர்த்தி உணவு வழங்கிட வேண்டும்.
வெள்ளநீரை மோட்டார் வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.தண்ணீரில் மூழ்கி பாழடைந்துள்ள நெற்பயிர்கள் சேதங்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவராமன், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago