சிதம்பரம் அருகே - வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது :

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள சித்தலப்பாடி கொடிபள்ளம் சாலையில் சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் ரயிலடி இந்திராநகரைச் சேர்ந்த செல்வகுமார் (28) அவரது நண்பர்களை பார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது குமராட்சி அருகே உள்ள வடமூர் கிராமத்தை சேர்ந்த சரத் என்ற சரத்குமார்(29) அவரை வழி மறித்து ரூ. ஆயிரத்தை வழிப்பறி செய்தார். இதுகுறித்து செல்வக்குமார் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரத் (எ) சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தாலுகா காவல் நிலையங்களில் 6 வழக்குகளும் உள்ளன. இவர் மீது சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசனின் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் குண்டர் சட்டத்தில் சரத் என்கிற சரக்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் இருந்த சரத்குமாரிடம் போலீஸார் நேற்று உத்தரவு நகலை வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்