தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி : ஈரோடு ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரோடு ஆட்சியர் ஹெச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2018-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்து மூடி வருகிறது. இருப்பினும், சில இடங்களில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் தடை செய்ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து, https://tnpcb.gov.in/contact.php எனும் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணையதளம் மூலம், அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு தொலைபேசி, மின்னஞ்சல், கடிதம் மூலம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களின் பங்களிப்பிற்காக வெகுமதி அளிக்கப்படும் என ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்