ஓமலூர் சென்றாய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான - 81 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை :

சேலம் ஓமலூரில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலத்தை மீட்க வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாகல்பட்டி பகுதியில் சென்றாயப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் தனி நபர்கள் மூலம் பட்டா செய்யப்பட்டு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலத்தை மீட்டு இந்து சமய அறநிலைதுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் நில மீட்புக் குழுவின் தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் சேலம் ஆட்சியர் மேற்பார்வையில் நிலத்தை ஆய்வு செய்து மீட்க உத்தரவிட்டது.

இதையடுத்து, கோயில் நில மீட்பு குழு தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அளவீடு பணி நடைபெற்றது.

இதுதொடர்பாக அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறும்போது, “இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலம் சுமார் ரூ.20 கோடி மதிப்புடையது. தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு குடியிருப்புகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்