காட்பாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந் துள்ளது. காட்பாடி பகுதியில் ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் அருகேயுள்ள குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந் துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் மழைநீர் குடியிருப்புப்பகுதிகளை சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையே அங்குள்ள கானாற்றின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் நுழைந்து பல்வேறு தெருக்களில் ஆறுபோல் ஓடி அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியது.
மழைநீரை வெளியேற்ற வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூர் - சித்தூர் பிரதான சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "எங்கள் ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எங்கள் ஊராட்சியில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அருகேயுள்ள கானாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் குடியிருப்புப்பகுதிகளை சூழ்ந்தன. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் மழைநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக்கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
இதைத்தொடர்ந்து, காட்பாடி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மழைநீரை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்ட பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago