சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் - கரோனா காலத்தில் 6 லட்சம் டன் அரிசி இலவசமாக விநியோகம் : இந்திய உணவுக் கழக மண்டல மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் காலத்தில் கோவை மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மட்டும், 6,02,600 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 37,688 மெட்ரிக் டன் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, என கோவை மண்டல இந்திய உணவுக்கழக மேலாளர் என்.ராஜேஷ் தெரிவித்தார்.

கோவை மண்டல இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) சார்பில் மத்திய அரசின் ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் வார விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும் முன்னாள் எம்பியுமான கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். கோவை மண்டல இந்திய உணவுக்கழக மேலாளர் என்.ராஜேஷ் பங்கேற்றுப் பேசியதாவது:

மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகம் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்து வருகிறது. அதன் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் ஒருவாரம் ஐகானிக் வார விழா கொண்டாடப்படுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களைக் கொண்ட கோவைக் கோட்டத்தில் வசிக்கும் 58,44,296 குடும்ப அட்டை தாரர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்கள் மத்திய அரசின் எப்சிஐ சார்பில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பாரத பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்பது உணவுப் பாதுகாப்பு நலத்திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கும் பொதுவிநியோக முறை அமல்படுத்தப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காலத்தில் கோவை மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மட்டும், 6,02,600 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 37,688 மெட்ரிக் டன் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நாட்டில் உள்ள ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது, என்றார்.

நிகழ்வில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்