மறைமுகத் தேர்தல் ஒத்திவைத்ததற்கான காரணம் கோரி - எருமப்பட்டி ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வரதராஜன் உயிரிழந்ததையடுத்து அவர் உறுப்பினராக இருந்த 15-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் முத்துக்கருப்பன் வெற்றிபெற்றார்.

இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 2-வது முறையாக நேற்று முன்தினம் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைக்கண்டித்து முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி. தங்கமணி தலைமையிலானோர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தலைவர் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று காலை எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறி சமரசம் செய்தனர். இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்