தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த நெடுஞ் சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு மாதனூர் மற்றும் விரிஞ்சிபுரம் தரைப்பாலங்கள் சேதமடைந் துள்ளன. இதனால், பொதுமக்களின் பிரதான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தரைப்பாலங்களையும் உயர்மட்ட பாலங்களாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை ஆய்வு செய்தார். தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. தமிழ கத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை என ஒட்டுமொத்தமாக பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. விரிஞ்சிபுரம் தரைப்பாலம் 322 மீட்டர் நீளம் கொண்டது. இதில், 80 மீட்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சீரமைக்க முடியாது. தண்ணீர் அளவு குறைந்ததும் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெறும். இங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்படும்.
தமிழகத்தில் 1,281 தரைப்பாலங் களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. இதில், இந்தாண்டு மட்டும் 648 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. பருவமழை இன்னும் முடியாததால் மாநில அளவில் சேத விவரங்களை முழுமையாக கணக்கிடவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 48 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.200 கோடி நிதியை பேரிடர் வருவாய் மேலாண்மை நிதியில் இருந்து நெடுஞ் சாலைத்துறைக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளுடன் கூடிய உயர்மட்ட பாலங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நல்லதுதான். இதுகுறித்த ஆய்வு முதல்வரின் பார்வையில் உள்ளது. அது முழுமை பெறும்போது நாம் மகிழ்ச்சி அடையலாம்’’ என்றார்.
அப்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து, உள்ளி-மாதனூர் இடையில் பாலாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago