எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு - மறைமுகத்தேர்தல் நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாட அதிமுக முடிவு : முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளோம், என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து வரதராஜன் உறுப்பினராக இருந்த 15-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் முத்துக்கருப்பன் வெற்றிபெற்றார்.

இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (29-ம் தேதி) தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், மறு தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி தலைமையிலான அதிமுக-வைச் சேர்ந்த ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவினர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 8, பாஜக 1, சுயேச்சை 1 என 10 பேர் உள்ளனர். திமுகவினர் 5 பேர் உள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல் இம்முறையும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை. அறிவிப்பு பலகையில் ஒட்டியதை பார்த்து தான் தெரிந்து கொண்டனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அதிமுக தலைமை அறிவுறுத்தல்படி அறவழியில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்