தோட்டப்பணியில் இருந்த வளரிளம் பெண்கள் மீட்பு : தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தலைவாசல் பகுதியில் உள்ள பருத்தி தோட்டத்தில் பணியில் இருந்த வளரிளம் பெண்கள் 4 பேரை தொழிலாளர் துறை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை பணியில் அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து, சேலம் ஸ்மைல் திட்ட இயக்குநர் நிர்மலா, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தலைவாசல் வட்டாரத்தில் உள்ள பருத்தி தோட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பாக நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் அருகே பாரதிநகர், அம்மன்நகர், ராஜ்நகர், வரகூர் கிராமம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பருத்தி தோட்டங்களில் சோதனை நடந்தது. இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து கூறியதாவது:

பருத்தி தோட்டங்களில் நடத்திய சோதனையில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை. வெளி மாவட்டத்தில் இருந்து அழைத்து வந்து பருத்தி தோட்டத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 18 வயது நிறைவடையாத 4 வளரிளம் பருவப் பெண் தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை மீட்டு சேலம் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தோம்.

அவர்களை பணிக்கு அமர்த்திய நில உரிமையாளர்கள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்