தொடர்மழையால் சாலையில் பள்ளம் ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் தொடர்மழையால் காந்திஜி சாலையில் இரு இடங்களில் மண் உள்வாங்கி திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. ஈரோடு காந்திஜி சாலையில் எஸ்பி அலுவலகம், மகப்பேறு மருத்துவமனை, தலைமை தபால் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

தொடர்மழை பெய்து வரும் நிலையில் இரு நாட்களுக்கு முன்னர், எஸ்பி அலுவலகம் அருகே காந்திஜி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலை மண்ணுக்குள் இறங்கியதால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பள்ளத்தை சீர்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதே சாலையில் இரு இடங்களில் சாலையில் மண் உள்வாங்கி பள்ளங்கள் ஏற்பட்டன.

இந்த பகுதியில் தடுப்புகளை வைத்த போலீஸார், போக்குவரத்தினை மாற்றியமைத்தனர். பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து காளை மாடு சிலை வழியாகச் செல்லும் ஒரு வழி பாதை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்று வழியாக ஸ்டேட் பாங்க் காலனி வழியாக காளைமாட்டு சிலைக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்ட இடங்களை சீரமைத்தபின்னர் போக்குவரத்து சீரானது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காந்திஜி சாலையில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாலையில் ஏற்படும் திடீர் பள்ளங்களால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்