பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத - தமிழக அரசைக் கண்டித்து பாஜக போராட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக பட்டியல் அணி மற்றும் வர்த்தகப் பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலக முன்புற வாசல்கள் நேற்று அடைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு, கன்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் ராஜசேகரன்(மாநகர்), அஞ்சாநெஞ்சன்(புறநகர்), கோட்ட அமைப்புச் செயலாளர் பாலன், முன்னாள் மாவட்டத் தலைவர் பார்த்திபன், பட்டியல் அணி மாவட்டத் தலைவர் பாஸ்கர், வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ராம்குமார் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

அவர்கள் பீமநகர் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அங்கு தூய்மையில்லை என போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதம் செய்ததால், அங்கிருந்து வெஸ்ட்ரி பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு, தங்கவைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல, பெரம்பலூரில் மாவட்டத் தலைவர் செல்வராஜ், கரூரில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், நாகையில் மாவட்டத் தலைவர் இளவரசன், திருவாரூரில் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் வீராச்சாமி ஆகியோர் தலைமையில் பாஜகவினர் நேற்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்