கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் 2-வது முறையாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் திமுக 3, அதிமுக 7, தமாகா 1 என்ற எண்ணிக்கையில் மாவட்ட வார்டு உறுப்பினர்கள் இருந்தனர். மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணைத் தலைவராக தானேஷ் என்கிற முத்துக்குமார் இருந்தார். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்டதால், தனது பத வியை ராஜினாமா செய்தார். அதன்பின், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த முத்துக்குமார், காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதில் திமுக வெற்றி பெற்றது.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அக்.22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, வார்டு உறுப்பினர்கள் 12 பேரும் வந்திருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திராசலம் அறிவித்தார். இதனால், தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 2 பேர் திமுகவில் இணைந்ததால், திமுகவின் பலம் 4-லிருந்து 6 ஆக அதிகரித்து, அதிமுக, தமாகா கூட்டணியின் பலம் 8-லிருந்து 6 ஆக குறைந்தது. இதனால் இருதரப்பும் சமபலத்தில் உள்ளன.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் வாணிஈஸ்வரி நியமிக்கப்பட்டு, நேற்று மதியம் 2.30 மணிக்கு துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் வாணிஈஸ்வரி காத்திருந்தபோதும், வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால், தேர்தலை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, இந்தத் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தால், தாங்களும் செல்லலாம் என ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே திமுக உறுப்பினர்கள் 6 பேரும் காத்திருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் யாரும் வராததால், தேர்தல் நடைபெறும் நேரம் முடிந்த பிறகு திமுக உறுப்பினர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago