புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு: மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக என் மீது புதுக்கோட்டை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் சகோதரரும் தமிழக அரசையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் அவதூறாக பேசி வருகிறார். அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. மனுதாரரும் அவதூறாக பேசி வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
இதையடுத்து, பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக பொது வெளியில் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. யாராக இருந்தாலும் எப்படி பேச வேண்டும் என வரைமுறை உள்ளது. மனுதாரர் இனிமேல் அவதூறாக பேசமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும், என்று கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago