தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, அக்டோபர் 22-ம்தேதி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. புளியரையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், திமுகவைச் சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் லெட்சுமி, அதிமுகவைச் சேர்ந்த 10-வது வார்டு உறுப்பினர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 12 கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர் உட்பட 13 பேர் வாக்களித்தனர். இதில், திமுகவைச் சேர்ந்த லெட்சுமி 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவைச் சேர்ந்த சரவணன் 5 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதேபோல், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 12 உறுப்பினர்களைக் கொண்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் துணைத் தலைவர் தேர்தலுக்கு குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் வந்தால்தான் தேர்தல் நடத்த முடியும். ஆனால், 6 உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த இடத்துக்கும் நேற்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தனர். துணைத் தலைவர் பதவிக்கு 7-வது வார்டு திமுக உறுப்பினர் பாரதிகண்ணன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பாரதிகண்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலையொட்டி புளியரை ஊராட்சி அலுவலகம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago