பவானிசாகர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பவானிசாகரை அடுத்த முடுக்கன் துறை, தொப்பம்பாளை யம் வனப்பகுதியில், நேற்று முன்தினம் காவல்துறையினர் ரோந்து சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. அவர்களில் இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), பூபதி (25) என்பதும், நவீன்குமார் மற்றும் வின்சென்ட் ஆகியோர் தப்பியோடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டதும், அதற்காக 16 நாட்டு வெடிகுண்டுகளைத் தயார் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பிரகாஷ் மற்றும் பூபதியைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
விளைநிலங்கள் சேதம்
பவானிசாகர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி, விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டுப்பன்றி விளைநிலங்களுக்குள் வந்தால் அவற்றைக் கொல்ல அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தனிநபர்களின் உதவியுடன் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி, அவற்றை விரட்ட சிலர் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற கும்பலை வனத்துறையினர் மற்றும் போலீஸார் அவ்வப்போது பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago