ஏற்காடு வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் பாதிப்பை தடுக்க வழிமுறைகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஏற்காடு வட்டாரத்தில், விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள மிளகு, மலைத்தோட்ட காய்கறிகள் உள்ளிட்வை தொடர் மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், தொடர் மழையால் மலைத்தோட்ட காய்கறிகள், பயிர்கள் உள்ளிட்டவை பாதிப்பதை தடுக்கும் வழிமுறைகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தோட்டக்கலை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அதிகமழையால் பயிர்களின் வேர் பகுதியில் நீர் தேங்கி, வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது தொடர் மழையின்போது, விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளைநிலங்களில் தேங்கியுள்ள உபரிநீரை வாய்க்கால் அமைத்து வெளியேற்ற வேண்டும்.
வேர் அழுகல் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வயலில் உள்ள உபரிநீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு, காப்பர் ஆக்சி குளோரைடு என்ற பூஞ்சைக்கொல்லி மருந்தை ஒரு லிட்டருக்கு இரண்டரை கிராம் அளவில் ஒரு செடிக்கு 4 லிட்டர் வேர்ப்பகுதியில் தெளிக்க வேண்டும். மேலும், 19:19:19 என்ற நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டருக்கு 3 கிராம் என்ற அளவில் கொடிகளுக்கு தெளிக்க வேண்டும்.
உயிர் உரங்களான பேசிலஸ் சப்டிலிஸ்-ஐ, ஒரு லிட்டருக்கு 5 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும் அல்லது ட்ரைகோட்டெர்மாவிரிடி மருந்தை ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ தொழுவுரத்தில் கலந்து மண்ணில் இடவேண்டும்.
மேலும் சந்தேகங்களுக்கு குறு வட்ட தோட்டக்கலை அலுவலர்கள் ஏற்காடு 9788023717, வெள்ளக்கடை 99440 22656, புத்தூர் 99439 40246, தோட்டக்கலை அலுவலர் 89733 33387, தோட்டக்கலை உதவி இயக்குநரை 73587 85872 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago