மண்டபத்தில் கனமழை - சூறைக்காற்றால் கடலில் மூழ்கிய விசைப்படகுகள் :

ராமநாதபுரம் மாவட்டம் மண்ட பத்தில் 11 செ.மீட்டருக்கு மேல் கனமழை பெய்ததாலும், சூறைக் காற்று வீசியதாலும் நள்ளிரவில் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ராமநாதபுரத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று `ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மாவட்டத் தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதில் மண்டபத்தில் 113.2 மி.மீ. மழை பெய்தது. நள்ளிரவில் கடலில் சூறைக்காற்றும் வீசியது. அதனால் மீனவர்கள் நேற்று கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளைப் பார்க்கச் சென்றனர்.

அப்போது மண்டபம் வடக்கு துறைமுகப் பகுதியில் நிறுத்தி யிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நிர்மல், சக்ரியாஸ் ஆகியோரது விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுந்து படகுகள் நடுக்கடலில் மூழ்கியது தெரிய வந்தது. இதில் படகுகள் சேதமடைந்தன.

கனமழையால் பாம்பன் சின்னப்பாலம், தோப்புக்காடு, சின்ன பள்ளிவாசல் தெரு, மண்ட பம் பெரியார் நகர், ஏகேஎஸ் தோப்பு, ராமநாதபுரம் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் 14 தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாம்பன்- 114.2, மண்டபம்- 113.2, ராமநாதபுரம்- 23, ராமேசுவரம்- 38.4, தங்கச்சிமடம்- 88.7, திருவாடானை- 22.6, தீர்த்தாண்டதானம்- 32.7, தொண்டி- 48.5, வட்டாணம்- 31.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE