பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தனியார் பள்ளி கராத்தே மாஸ்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தாளாளரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த பகுடுப்பட்டு கிராமத்தில் தனியார் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி அவரது வீட்டில் கைகளை அறுத்துக் கொண்டும், தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட பெற்றோர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்கொலை தொடர்பாக பெற்றோர் விசாரித்தபோது, “பள்ளியில் பணிபுரியும் ஆத்தூர் அடுத்த சீலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராஜா என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும்” மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்பி அபிநவ் உத்தரவின்பேரில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, கராத்தே மாஸ்டர் ராஜாவை (46) நேற்று முன்தினம் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பின்னர் ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் (49) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும் ராஜா வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “மாணவிக்கு கடந்தசில ஆண்டுகளாக, கராத்தே மாஸ்டர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்” என்றனர்.
இதனிடையே, கைதான ஸ்டீபன் தேவராஜ், திடீரென மயக்கம் அடைந்ததால் அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை போலீஸார் சிகிச்சைக்கு சேர்த்தனர். கைதான கராத்தே மாஸ்டர் ராஜா சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago