நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை : நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. மாலை முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 17 மி.மீ. மழை பதிவானது. மணிமுத்தாறில் 11.80 மி.மீ., பாளையங்கோட்டையில் 5, சேர்வலாறு, திருநெல்வேலியில் தலா 4, அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பதிவானது.

அணைகள் நிலவரம்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,229 கனஅடி நீர் வந்தது. 2,553 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணை நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.09 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,395 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. 50 அடி உயரம் உள்ள வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 346 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 22.96 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை முழுமையாக நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் 600 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 52.25 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 155 கனஅடி நீர் வந்தது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணையில் 8 மி.மீ., அடவிநயினார் அணையில் 5 மி.மீ., கருப்பாநதி அணை, ஆய்க்குடியில் தலா 2 மி.மீ., தென்காசியில் 1.80 மி.மீ., குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணைக்கு வரும் 207 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 82.70 அடியாக இருந்தது.

இதேபோல், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தப்பட்டு அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.24 அடியில் நிலைநிறுத்தப்பட்டு அணைக்கு வரும் 70 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

வெள்ளப்பெருக்கு

மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி வெள்ளம் சந்நிதி பஜாரில் பெருக்கெடுத்து ஓடியது.

பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளம் அருவிக்கரையில் உள்ள படிக்கட்டுகள் வழியாக சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்