தொடர் மழையால் திருநெல்வேலி மாநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்த நிலையிலும் பாளையங்கோட்டை, நந்தனார் நியூ காலனி பகுதியில் சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கிக் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் ஓடை வசதி இல்லாததால் லேசான மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் கழிவுநீர் ஓடை அமைக்கப்படவில்லை. உடனடியாக கழிவுநீர் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதேபோல், பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே உள்ள பாதாளச் சாக்கடை குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி மழை நீருடன் தேங்கிக் கிடக்கிறது. இதை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago