திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கூட்டப்பனை கடலோரப் பகுதிகளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் கடல் கொந்தளிப்பு, இயற்கை சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை ஆய்வு செய்தோம். இங்கு தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால்தான் கடல் அரிப்பு இருக்காது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். இதை மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியதாழையில் இருந்து கூட்டப்புளி வரை உள்ள அனைத்து கடலோர பகுதிகளையும் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஓராண்டு காலம் ஆய்வு செய்து, மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு இல்லாமல் கடலரிப்பைத் தடுக்க என்னென்ன பணிகள் செய்யலாம் என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது, கடலரிப்பைத் தடுக்க தற்காலிகமான பணிகள் செய்யப்பட உள்ளது. கூட்டப்புளி, பெருமணல், தோமையார்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி, கூடுதாழை, கூட்டப்பனை உட்பட அனைத்து மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago