திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகில் உள்ள நெல்லை கால்வாய், கிருஷ்ணப்பேரி குளம், கண்டியப்பேரி கோடகன் கால்வாய், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறும்போது, “திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகில் நெல்லை கால்வாய், கிருஷ்ணப்பேரி குளம், கண்டியப்பேரி கோடகன் கால்வாய், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் அடைப்பு களை சரி செய்யும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு மாதம் 380 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரி அளவைவிட 110 மி.மீ அதிகமாக மழை பெய்துள்ளது.
503 குளங்கள் நிரம்பின
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,105 குளங்கள் உள்ளன. இதில் 503 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.336 குளங்களில் 76 முதல் 99 சதவீதமும், 80 குளங்களில் 51 முதல் 75 சதவீதமும், 153 குளங்களில் 26 முதல் 50 சதவீதமும், 33 குளங்களில் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளது.
எதிர்பாராத விதமாக அதிமாக மழை பெய்துள்ளது. நீர்நிலைகள், கால்வாய்களில் உள்ள அடைப்புகளை விரைந்து சரி செய்ய எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரை வடிய வைப்பதற்கான பணிகள் துரிதமாகச் செய்யப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் முறையான திட்டம் தீட்டி நீர்நிலைகளில் வடிகால் வரைபடங்களை கொண்டு, ஆக்கிரமிப்பு பகுதி களை கண்டறிந்து அகற்றி, மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணிகள் தண்ணீர் வடிந்தவுடன் நடத்தப்பட உள்ளது. பழுதான சாலைகள் மழைக் காலம் முடிந்தவுடன் சரி செய்யப்படும். பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும்” என்றார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரை கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், உதவி செயற்பொறி யாளர் தங்கராஜன், திருநெல்வேலி வட்டாட்சியர் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago