தேர்தல் ஆணைய பார்வையாளர் பங்கேற்ற - வாக்காளர் பட்டியல் ஆய்வுக் கூட்டத்தில் பாஜக வெளிநடப்பு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இம்மாதம் 1-ம் தேதி வெளியிடப் பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி களுக்காக 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்றுமுன்தினமும், நேற்றும் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 1,611 வாக்குச்சாவடி மையங் களிலும் முகாம் நடைபெற்றது.

இந்நிலையில், மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தொடர்பாக தேர்தல் ஆணைய பார்வையாளர் எம்.லெட்சுமி நேற்று ஆய்வு செய்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் கலந்துகொண்ட மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “தொடர் மழை காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்கான சிறப்பு முகாம்கள் சரியாக நடைபெறவில்லை. எனவே, கூடுதல் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். புதிய இளம் வாக்காளர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்கின்றனர். எனவே, கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாஜக வெளிநடப்பு

பாஜக சார்பில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் எம்.மான்சிங் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

“தெருக்கள் மற்றும் பகுதிகளின் பெயர்களை அரசு கெஜட்டில் உள்ளவாறு வாக்காளர் பட்டியலில் குறிப்பிடாமல் வேறு பெயர்களை குறிப்பிடுகின்றனர். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கண்டித்தும், ஆய்வு கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை கண்டித்தும் வெளிநடப்பு செய்வதாக” அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர் லெட்சுமி தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்