‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக - தேரடி வீதியில் பஞ்ச ரதங்களை பாதுகாக்க தகடுகள் பொருத்தும் பணி தீவிரம் :

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை தேரடி வீதியில் மழையில் நனைந்து கொண்டிருந்த பஞ்ச ரதங்களை பாதுகாக்க தகடுகள் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின், 7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும்.

விநாயகர், வள்ளி தெய் வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி திருத் தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதற்கு மாற்றாக, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சுவாமி உற்சவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், பஞ்ச ரதங்களை சீரமைக்க, அதனை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப் பட்டிருந்த பைபர் மற்றும் இரும்பு தகடுகள் கடந்த செப்டம்பர் மாதம் அகற்றப்பட்டன.

பக்தர்கள் வேதனை

அதன் பிறகு மகா தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானதால், பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில், பஞ்ச ரதங்களில் அகற்றப்பட்ட தகடுகளும் மீண்டும் பொருத்தவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பஞ்ச ரதங்களின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தகடுகள் பொருத்தும் பணி

இது தொடர்பாக புகைப்படத் துடன் கூடிய செய்தி ‘இந்து தமிழ் திசை’யில் நேற்று வெளியானது. இதையடுத்து, பஞ்ச ரதங்களை பாதுகாக்க, அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் தேருக்கு பைபர் தடுப்புகளும், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் திருத்தேர்களுக்கு இரும்பு தகடுகள் பொருத்தும் பணி, கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.

பஞ்ச ரதங்களை பாதுகாக்க வேண்டும் என செய்தி வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’க்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE