தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலி - தி.மலை மாவட்டத்தில் 1,606 ஏரிகள் நிரம்பின : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 1,983 ஏரிகளில் 1,606 ஏரிகள் நிரம்பி வருகின்றன.

வெப்பச் சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவ மழையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, வட கிழக்கு பருவ மழையும் கடந்த ஒரு மாதமாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் அனைத்து நீர் நிலைகளும், தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இதன் எதிரொலியாக, தென் பெண்ணையாறு, செய்யாறு, கமண்டல நாக நதி, மஞ்சலாறு, துரிஞ்சலாறு மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1,983 ஏரிகளில் 1,606 ஏரிகள் (81 சதவீதம்) நிரம்பி வழிவதால், பாசன கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கால்வாய் வழி தடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதால், விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் தாழ்வானப் பகுதிகள், காலி இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அணைகள் நிலவரம்

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையில், பராமரிப்பு பணிக்காக 20 ஷட்டர்களும் அகற்றப் பட்டுவிட்டதால், தற்போதைய அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளன. அணையின் நீர்மட்டம் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக 99 அடியாக நீடிக்கிறது.

இதே நாளில் கடந்தாண்டு 89.35 அடியாக இருந்தது. அணையில் 3,609 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு வரும் 6,800 கனஅடி தண்ணீரும், அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 2.4 மி.மீ., மழை பெய்துள்ளது.

59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 52.48 அடியாக பரா மரிக்கப்படுகிறது. கனமழை தொடர்வதால், அணையின் நீர் இருப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதே நாளில் கடந்தாண்டு 39.52 அடியாக இருந்தது. அணையில் 539 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 1.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 14.92 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்வதால், அணை யின் பாதுகாப்பு கருதி, அணை யில் நீர் இருப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேநாளில் கடந்தாண்டு 6.89 அடியாக இருந்தது. அணையில் 46.496 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 257 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 285 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் இருப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 49.27 அடியாக உள்ளது. இதே நாளில் கடந்தாண்டு 48.74 அடியாக இருந்தது. அணையில் 166.728 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 2.8 மி.மீ., மழை பெய்துள்ளது.

மழை அளவு விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 4.77 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 2, செய்யாறில் 12, செங்கத்தில் 1, ஜமுனாமரத்தூரில் 2, வந்தவாசியில் 15.2, திருவண்ணா மலையில் 2.5, தண்டராம்பட்டில் 3, சேத்துப்பட்டில் 2.2 கீழ் பென்னாத்தூரில் 1.2, வெம் பாக்கத்தில் 16.2 மி.மீ., மழை பெய்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்