கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்ற நடைமுறை தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் வார்டு வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு சிறப்பு பணியாளர்களை கொண்டு வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என உறுதி செய்து வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள் ளாதவர்களால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 லட்சத்து 59 ஆயிரத்து 200. இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 5 லட்சத்து 98 ஆயிரத்து 803 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 2 லட்சத்து 58 ஆயிரத்து 391 பேர் என மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரத்து 194 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் கையிருப்பில் தற்போது 3.20 லட்சம் டோஸ் தடுப்பூசி உள்ளது. மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
தடை விதிக்கப்படும்
வாரத்துக்கு 2 முறை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்ற நடைமுறை தீவிரமாக கடைப்பிடிக்கப்படும். ஆகவே, மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 2-வது தவணை காலக்கெடு முடிந்தவர்கள் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago