கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப தரிசனம் நாளை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமானது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாட வீதியில் நடைபெற வேண்டிய சுவாமி உற்சவங்கள், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் எளிமையாக நடைபெற்றன. இதில் 7-ம் நாள் உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகி யோர் தனித்தனி திருத் தேர்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டது.
முன்னதாக, ஆண் பெண் சமம் எனும் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், கொடி மரம் முன்பு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். அதன்பிறகு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பவனி மற்றும் 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
பின்னர், சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 23-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 19-ம் தேதி மாலை ஏற்றப்பட்ட மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 11-வது நாளாக இன்று (29-ம் தேதி) மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை நாளை அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்பிறகு மகா தீப கொப்பரை, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பின்னர், கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை, ஆரூத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக கோயில் நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago