சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள - குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி : உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூரில் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பட்டரைவாக்கம், திருநின்றவூர் – கிருஷ்ணாபுரத்தில் வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்பத்தூர் மற்றும் பட்டரைவாக்கம் பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, அம்பத்தூர், பானு நகரில் பல வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, “ஆண்டுதோறும் சிறிய மழைக்கே எங்கள் பகுதியில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி விடும். இந்நிலையில், தற்போது இருதினங்களாக பெய்து வரும் கனமழையால் பல வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி போன்ற சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. கழிப்பறையிலும் தண்ணீர் புகுந்துள்ளதால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். அதேபோல், குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகிறோம்” என்றனர்.

இதேபோல், பட்டரைவாக்கம் ஞானமூர்த்தி நகர், பெரியார் நகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பலஇடங்களில் மாநகராட்சி சார்பில், மோட்டார் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் இதுபோன்று மழைநீர் தேங்காத வகையில் தடுக்க, நிரந்தரத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் கிருஷ்ணாபுரம் முதல்குறுக்குத் தெரு மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால், இங்கு சிறுமழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. மேலும், 2-வது பிரதான தெருவில் இருந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் இத்தெருவுக்குள் வந்து சேர்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறும்போது, “இப்பிரச்சினை குறித்து பலமுறை திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், முதல்வர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்கள் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சா.மு.நாசரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

சாலை மறியல் போராட்டம்

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், திருவள்ளூர் - தண்ணீர்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. எனவே, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த, திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்