திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மிக அதிக அளவாக 20 செ.மீ. அளவுக்கு கனமழைகொட்டித் தீர்த்தது. இதனால், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தனி தீவாக மாறியது. இதைத் தவிர, மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
குமரி மற்றும் இலங்கைக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில், மிக அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்றுமுன்தினம் காலை தொடங்கிய மழை இரவு முழுவதும் விடியவிடிய பெய்தது. இதனால், ஆவடியில் உள்ள பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆவடி வீட்டுவசதிய வாரிய குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்து தனி தீவாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, மழைநீர் வடிகால் வசதி முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், சிறிய மழைக்கே தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. ஆவடி தொகுதி உருவாக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று அப்துல் ரஹீம், க.பாண்டியராஜன் மற்றும் தற்போது சா.மு.நாசர் என 3 பேர் அமைச்சர்கள் ஆயினர். ஆனால், இதுவரை இத்தொகுதியில் சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நாங்கள் ஆண்டுதோறும் இந்த இன்னல்களை அனுபவித்து வருகிறோம் என்றனர்.
இதேபோல், ஆவடி-பூந்தமல்லி புதிய ராணுவ சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி தொடங்கி பலமாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அச்சாலையில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், வசந்தம் நகர், ராம் நகர்உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago