விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கூறியது:
நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் காட்டுப்பன்றிகள் கூட்டம் வவசாய நிலங்களை நோக்கி படையெடுக்கின்றன. எனவே வனத்துறை மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி இப்பிரச்சினையை எப்படி கையால்வது என ஆலோசிக்க வேண்டும். தற்போது கோமாரி நோய் மாடுகளை அதிக அளவில் தாக்குகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மீன் வளர்க்க அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கும்போது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றி மீன் பிடிக்க முயற்சிக்கிறார்கள். இதனால்பயிர்கள் நீர் இல்லாமல் தவிக்கிறது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப எவ்வித கட்டுப்பாடும் இன்றி உரங்கள் வழங்க உத்தரவிடவேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள தரைப் பாலங்கள் சேதமடைந்துள்ளன. இவைகளை மேம்பாலமாக மாற்றி கட்ட வேண்டும். விழுப்புரம் நகரில் உள்ள பூந்தோட்டம் அம்மா குளம், ஆஞ்சிநேயர் குளத்திற்கு தண்ணிர் வருவதற்கு வழிவகை செய்யவேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் கூறியது, "வனத்துறையினருடன் ஒருங்கிணைப்பு கூட்டம் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் கோமாரி நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளில் மீன் வளர்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. கன மழையால் சிறியது முதல் பெரிய அளவில் 7,468 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 6 ஆயிரம் வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கூடுதலாக 2 ஆயிரம் டன்உரம் வந்துள்ளது. உரம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை" என்றார்.
இக்கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் ரமணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, கூட்டுறவு இணைப் பதிவாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பசுமை போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago