கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பட்டியலினத்தவர்களின் முன்னேற் றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதினை தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டியலின சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறிப்பிட வேண்டும்.
இவ்விருது பெற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது www.tn.gov.in/ta/forms/departme/1 என்ற இணையதள வாயிலாகவும் கட்டணமின்றி விண்ணப்பத்தை பெற்று பயன்பெறலாம். விருது பெற தகுதியுடையவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதேபோன்று சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.1,00,000 விருது தொகை, ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்கள் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
2021-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்டுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைப் புரிந்த தகுதியுடையவர்கள் இவ்விருது பெற 30.11.2021 வரை விண்ணப்பித்திட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களது சுய விவரங்கள், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் (BIO - DATA) உள்ளடக்கிய விண்ணப்பத்தினை வரும் 30-ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
விருதைப் பெறுவதற்கு தகுதியுடைய சமூக ஆர்வலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago