சாத்துக்கூடலூர், சேத்தியாதோப்பு பகுதிகளில் - 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் :

By செய்திப்பிரிவு

விருத்தாசலம் அருகே சாத்துக் கூடலூர் கிராமத்தில் சம்பா பருவத்தை ஒட்டி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். கனமழையால் இந்த விவசாய நிலங்களை ஒட்டிய யமுனை ஏரி, மேமாத்தூர் ஏரி மற்றும் அப்பகுதி குட்டைகள் நிரம்பி விளை நிலங்களில் புகுந்துள்ளன.

இதனால் அப்பகுதியில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடரும் மழை காரணமாக நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சாத்துக்கூடலூரில் இருந்து தீவலூர், பெண்ணாடம் கிராமங்களுக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்துக்கூடலூர் - உச்சிமேடு வழியாகச் செல்லும்சாலையில் மழைநீர் புகுந்து,போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் விடப்படுவதாலும், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும்,மதுவானைமேடு பெரிய ஏரியின் தண்ணீர் நிரம்பி அப்பகுதி வயலுக்குள் நுழைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது.

மதுவானைமேடு கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை முறைப்படி தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறிவரும் நிலையில், இந்த பாதிப்பு அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்