வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 2 ஆயிரம் கனஅடி வெளியேற்றம் :

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு அதிக நீர் வரத்து இருப்பதால் ஏரி வடிகால் மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரிக்கு செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, காட்டாறுகள் மூலம் விநாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாற்றில் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏரிக்கு மழை தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 45.50 அடி ஆக உள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித் துறையினர் நேற்று காலை முதல் ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை மதகில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரூம், பூதங்குடியில் உள்ள விஎன்எஸ்எஸ் வடிகால் மதகின் வழியாக விநாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீரையும் வெளியேற்றி வருகின்றனர். ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் சாம்ராஜ் கூறுகையில்," அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் வீராணம் ஏரிக்கு மழை தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரிக்கு வந்துள்ள மழை தண்ணீர் வடிகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் மேலும் அதிகரிக்கப்படும். வீராணம் ஏரி, கீழணை, வடவாறு, கொள்ளிடம் ஆறு, பழைய கொள்ளிடம் ஆறு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் எனது தலைமையில் உதவி செயற் பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், கீழணை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினரால் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்