நாமக்கல் மாவட்டத்தில் 3.82 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போடாமல் அலட்சியம் : அவசியத்தை உணர்ந்து ஊசி போடுமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் 3,82,082 பேர் இதுவரை ஒரு தவணை கரோனா தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (28-ம் தேதி) 506 இடங்களில் 12-ம் கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய தொழில்கள் நடைபெறும் மாவட்டம். எனவே, வெளி மாநிலங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதுகாப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இருந்தும் 3 லட்சத்து 82 ஆயிரத்து 82 பேர் இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 லட்சத்து 2 ஆயிரத்து 218 பேரில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 804 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. எனவே, கரோனா தடுப்பூசியின் அவசியம் உணர்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று 12-ம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உட்பட 506 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்