பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சுமார் 53 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கீழக்கரை, இரட்டைமலை சந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 8 பேரும், வடக்குமாதவி அங்கன்வாடி மையத்தில் 12 பேரும், கல்பாடி அங்கன்வாடி மையத்தில் 19 பேரும், காருக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், பேரளி அரசு நூலக கட்டிடத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், முருகன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும், நாரணமங்கம் மருதடி அங்கன்வாடி மையத்தில் 15 பேரும், திருவிளக்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் 41 பேரும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 பேரும் என மொத்தம் 255 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குன்னம் வட்டத்தில் 20 வீடுகள், ஆலத்தூர் வட்டத்தில் 15 வீடுகள், வேப்பந்தட்டை வட்டத்தில் 13 வீடுகள், பெரம்பலூர் வட்டத்தில் 5 வீடுகள் அண்மையில் பெய்த பலத்த மழையால் இடிந்து சேதமடைந்துள்ளன.
முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி, மஞ்சள், கருணைக் கிழங்கு, சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நாசமாகிவிட்டன.
பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனே கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago