தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு : பாபநாசம் அணையிலிருந்து 6,818 கனஅடி தண்ணீர் திறப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியில் நேற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் பாபநாசம் அணையிலிருந்து 6,818 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 53 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

சேர்வலாறு- 22, மணிமுத்தாறு- 29, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 35, அம்பாசமுத்திரம்- 16, சேரன்மகாதேவி- 8.8, ராதா புரம்- 16.2, களக்காடு- 12.2, பாளை யங்கோட்டை- 3, திருநெல்வேலி- 4.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 138.75 அடியாக இருந்தது. அணைக்கு 6,668 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 6,818 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 102.20 அடியை எட்டியிருந்தது. அணைக்கு 7,194 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு முழு கொள்ளளவை எட்டியிருக்கும் நிலையில், அணைக்கு வரும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்பட்டிருக்கிறது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 49 அடியாக இருந்தது. அணைக்கு 345 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிரு ந்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

அணைகளில் இருந்து பெருமள வுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து தாமிரபரணியில் நேற்று வெள்ளப்பெருக்கு நீடித்தது. திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் மற்றும் கைலாசபுரம், வண்ணார்பேட்டை பகுதிகளில் உள்ள மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் ஆற்றில் படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடைவிதித்து திருப்பி அனுப்பினர்.

இதனிடையே, தேங்கியுள்ள மழை நீர் குறித்த விவரங்களை பொதுமக்களே நேரடியாக பதிவு செய்யும் முறையை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. பருவ மழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணைய தளம் வழியாக பொதுமக்களே, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம் என்றும், பதிவு செய்யப்படும் விவரங்கள் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட கொண்டாநகரம், சுத்தமல்லி, தருவை மற்றும் கருப்பந்துறை நீரேற்று நிலையங்களில், தாமிரபரணி ஆற்றின் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையுள்ளது. எனவே, வார்டு 19 மற்றும் வார்டு 26 முதல் 38 வரையிலான பகுதிகளுக்கு நாளை (29-ம் தேதி) வரை குடிநீர் விநியோகிக்க இயலாது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்