மணிலா பயிரில் விதை பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு தி.மலை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்கச் சான்று உதவி இயக்குநர் தி.மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விதை பண்ணை அமைப்பதற்கு தேவையான மணிலா பயிரின் வல்லுநர் விதை மற்றும் ஆதார நிலை விதைகளை, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். விதை பண்ணை அமைக்க, விதை வாங்கிய விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டை மிக முக்கியம். விதைகளை விதைப்பதற்கு முன்பாக, மணிலா ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை குளிர்ந்த நிலைக்கு வந்த வடி கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தியை பின்பு விதைக்க வேண்டும்.
விதைத்த 30 நாட்களுக்குள், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக் குநர்களை அணுகி, விதை பண்ணையை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.25 (ஒரு விதைப்பு அறிக்கை), வயல் ஆய்வு கட்டணம் ரூ.50 (ஓர் ஏக்கர்) மற்றும் விதை பகுப்பாய்வு கட்டணம் ரூ.30 (ஒரு விதைப்பு அறிக்கை) செலுத்த வேண்டும். விதைச் சான்றுஅலுவலர்கள், 135 நாட்களுக்குள் மணிலா விதை குவியலை ஆய்வு செய்வார்கள்.
மணிலா பயிரில் அடியுரமாக ஓர் ஏக்கருக்கு 80 கிலோ மற்றும் விதைத்த 45-வது நாளன்று மேலுரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதன்மூலம் திரட்சியான காய்கள் பிடித்து, அதிக மகசூல் கிடைக்கும். தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியத்தை அரசு வழங்குவதால், விதை பண்ணை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago