சேலம் கருங்கல்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஆறு பேர் உயிரிழந்த இடத்தை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் மாநகராட்சி கருங்கல்பட்டி, பாண்டு ரங்கநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி. கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் தீயணைப்புத்துறை அலுவலர் பத்மநாபன் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் துணிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் தரைமட்டமாகி விட்டன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. ஆனாலும் 6 வீடுகளும் தரைமட்டம் ஆனதால் அரசு புதிதாக வீடோ அல்லது நிதி உதவியோ அவர்களுக்குத் தர வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் போது பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், காஸ் கசிவு உள்ளதா என்பதை அறிந்து கவனமுடன் செயல்பட வேண்டும், என்றார்.
தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago