சேலத்தில் இயல்பைக் கடந்து கொட்டியது மழை : குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இயல்பைக் கடந்து இதுவரை 1,240.20 மி.மீ மழை பெய்துள்ளது, என மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தலைமை வகித்து பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் இயல்பாக நவம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய மழையளவு 942.10 மி.மீ. ஆனால், நடப்பு ஆண்டு நேற்று முன்தினம் வரை 1,240.20 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இயல்பான அளவை விட அதிகளவு பருவமழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் வரை 1,74,583.8 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நெல் 124.867 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 38.807 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 142.766 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 177.672 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்ய 1,56,500.97 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 65,458.83 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது உளுந்து, தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.199 செலுத்தி வரும் 30-ம் தேதி வரையிலும், சோளத்திற்கு ரூ.125 செலுத்தி டிசம்பர் 15-ம் தேதி வரையிலும், ராகி மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு ரூ.140, ரூ.300 செலுத்தி டிசம்பர் 31-ம் தேதி வரையிலும் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. மேலும், உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், துணை இயக்குநர் (தோட்டக்கலை) சத்யா, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் புருசோத்தமன் உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்