குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இருந்து தனியார் நீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் :

By செய்திப்பிரிவு

குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில், ஆழ்குழாய் கிணறு அமைத்து, குழாய் மூலமாக வேறு இடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வினோபா நகர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டம் நிறைவேறினால், நிலத்தடி நீர் பாதிக்கும் என்றும் குடிநீர் திட்டத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற குழாய்களை அமைக்கும் பணிக்காக நேற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இயந்திரங்களை சிறைபிடித்து, கொங்கர்பாளையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினர் சாலையிலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.

நேற்று மாலை வரை மறியல் தொடர்ந்த நிலையில், கோபி ஆர்டிஓ பழனிதேவி தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் வகையில் டிசம்பர் 17-ம் தேதி வரை திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்