மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதான : நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு :

By செய்திப்பிரிவு

கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவால், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரமாகிறது.

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார், விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மது போதையில் வாகனங்களை ஓட்டி வரும் நபர்களை பிடிக்க, ‘பிரீத் அனலைசர்’ என்ற கருவியை பயன்படுத்துகின்றனர். மது அருந்தியிருப்பது உறுதியானால் தொடர்புடைய ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அபராதம் விதிக்கப்படுகிறது.

கரோனா தொற்று அச்சம் காரணமாக, சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த ‘பிரீத் அனலைசர்’ கருவி, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சதவீதம் சாலை விபத்துகளுக்கு மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதும் காரணமாகும். காவல்துறையின் புள்ளி விவரப்படி, மாநகரில் நடப்பாண்டு மது போதையில் வாகனம் ஓட்டியதாக 1,220 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார்.

இதில், மதுபோதை வாகன ஓட்டுநர்கள் மீதான நடவடிக்கை மந்தமாக இருப்பதை கண்டு, காவலர்களை கண்டித்தார்.

இதுதொடர்பாக, காவல் ஆணையர் கூறும்போது, ‘‘மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த போக்குவரத்து பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மது அருந்தும் ஓட்டுநர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மோட்டார் வாகன விபத்துகளில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், உடனடி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன விபத்து வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன விபத்துகள் நடந்த இடத்தை ஆய்வு செய்து, விபத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து விதிகள் தொடர்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE