குழாய் பதிப்பதாக கூறி ரூ.48.10 லட்சம் மோசடி : முன்னாள் பேரூராட்சி தலைவர் உட்பட : 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு :

குழாய் பதிப்பதாக கூறி ரூ.48.10 லட்சம் மோசடி செய்ததாக கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்றத்தில் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தலைவராக பதவி வகித்தவர் தளபதி முருகேசன். திமுக பிரமுகர். இதே பேரூராட்சியில் உதவிப்பொறியாளராக மேனகா(43), செயல் அலுவலராக ரேணுகா(49), உதவி செயற்பொறியாளராக மகேந்திரன்(54) ஆகியோரும் பணியாற்றினர். ஒப்பந்த திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை பார்த்திபன்(56), மனைவி புவனேஸ்வரி(49) ஆகியோர் நடத்தி வந்தனர். இருவரும் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களாக இல்லை.

இந்நிலையில், “பேரூராட்சியில் கூடுதல் இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள பார்த்திபன், புவனேஸ்வரி தம்பதிக்கு முறைகேடாக அனுமதி அளித்து, ரூ.94.5 லட்சம் மதிப்பில் 27 சிறு பணிகளாக பிரித்து பணியை ஒப்படைத்துள்ளனர். பின்னர் 50 சதவீத பணியை முடித்ததாக கூறி, ரூ.48 லட்சத்து 10 ஆயிரத்து 265 தொகையை தம்பதிக்கு வழங்கியுள்ளனர். ஆனால் பணிகள் நடைபெறவில்லை. தொகையை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் இன்ஸ்பெக்டர் லதா புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில், மேனகா, ரேணுகா, மகேந்திரன், பார்த்திபன், புவனேஸ்வரி, தளபதி முருகேசன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE