நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடை பராமரிப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக கறவை மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோமாரி நோய் தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த விவசாயி என்.நடேசன் கூறியதாவது: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க ஆண்டுக்கு இரு முறை தடுப்பூசி போட வேண்டும். இந்தாண்டுக்கான தடுப்பூசி இதுவரை போடப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்று நோய் என்பதால் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தினால் தொற்று பரவல் அதிகரிக்கும். எனவே கால்நடை மருத்துவர்கள் நேரடியாக வந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. அங்கு கால்நடை மருத்துவர் இல்லை. அதனால், சிகிச்சைக்கு கால்நடைகளை அழைத்துச் சென்றாலும் பயன் இல்லை. கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல திருச்செங்கோட்டிற்கு வழங்கப்பட்ட அவசர ஊர்தி ஈரோட்டுக்கு அனுப்பப்பட்டது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 3.32 லட்சம் கால்நடைகள் உள்ளன. இவற்றுக்கான கோமாரி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் மூன்று நிறுவனங்கள் தடுப்பூசி வழங்கின. தற்போது ஒரே நிறுவனம் தடுப்பூசி வழங்குவதால் தாமதம் ஏற்படுகிறது.
விரைவில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. வந்தவுடன் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படும். கோமாரி நோய் தொடர்பாக மாவட்டம் முழுவதும் 90 முகாம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது கால்நடைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் தான் கோமாரி நோய் தாக்கமா என்பதை அறிய முடியும்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 105 கால்நடை மருந்தகம், 5 மருத்துவமனைகள் உள்ளன. அனைத்திலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர். மாவட்டத்திற்கு நாமக்கல், திருச்செங்கோட்டிற்கென இரு கால்நடை அவசர ஊர்தி வழங்கப்பட்டன. அதில் ஒன்று ஊர்தி இல்லாத மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago