கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் எ.வ.வேலு மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் கூறியது: தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார். அதன் படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.398.57 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் முடிந்து நிறைவு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மருத்துவக் கல்லூரியானது 6 தளங்களை கொண்டதாகும். 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடத்தில் கதிரியக்கத் துறை, மருத்துவக் கிடங்கு, மருந்தகம், ரத்த வங்கி, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 8 அறுவை அரங்கங்கள், 2 அவசர அறுவை சிகிச்சை அரங்கங்கள், 6 சிறிய அறுவை சிகிச்சை அரங்கங்கள், 8 தீவிர சிகிச்சை பிரிவு அறைகள், 88 அறைகள் கொண்ட சி.ஆர்.ஆர்.ஐ. ஆண்கள், பெண்கள் விடுதிகள், உணவுக்கூடம், நவீன சமையலறை கூடங்கள், பிரேத பரிசோதனை அறை உள்ளிட்ட மருத்துவமனை கட்டிடங்களுக்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மருத்துவக் கல்லூரியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் அறைகள், துறை பேராசிரியர்கள் அறைகள், 150 இருக்கைகள் கொண்ட 4 விரிவுரையாளர் அரங்கங்கள், அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஆராய்ச்சி ஆய்வகம், தேர்வறை, மத்திய நூலக அறை, திறனாய்வகம், 545 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம், வங்கி மற்றும் தபால் நிலையங்கள், சிற்றுண்டி, உடற்பயிற்சி நிலையம், 258 மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியே விடுதி கட்டிடங்களும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய இக்கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்றார்.
ஆய்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினர்கள் உதயசூரியன் (சங்கராபுரம்), . கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்) மற்றும் ஏ.ஜே.மணிக்கண்ணன் (உளுந்தூர்பேட்டை)ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago