மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் மொபைல்போன் அனுமதிக்கப்படுமா? : வாக்குறுதி அளித்த அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் உள்ளூர் திமுக அமைச்சர்கள் உறுதியளித்தப்படி மீண்டும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மொபைல்போன்கள், கேமரா எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மீீனாட்சியம்மன் கோயிலில் நடந்த தீ விபத்துக்குப் பிறகு கோவிலுக்குள் மொபைல்போன், காமிரா எடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனத்துடன் கோயிலின் கோபுர அழகு, சிற்பங்களின் அழகு ஆகியவற்றையும் கண்டு ரசிப்பதோடு, இங்கு வந்து சென்றதன் நினைவாக ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் விரும்புவர். ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் சுற்றுலா நகரான மதுரையின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் மொபைல்போன் ஜாமர்கள் இருப்பதால் தரிசனத்துக்கு மொபைல்போன்களால் இடையூறு ஏற்படவும் வாய்ப்பில்லை.

கடந்த மாதம் நடந்த ‘மதுரையின் மாஸ்டர் பிளான்’ கருத்துக் கேட்பு கூட்டத்தில் உள்ளூர் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இதனை ஒப்புக்கொண்டு வருத்தப்பட்டு தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ‘‘மொபைல்போன், கேமராவுக்கு அனுமதி இல்லாததாலேயே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே மீண்டும் இவற்றை கொண்டு செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘தமிழகத்திலேயே மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டுமே மொபைல்போன், கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கோயிலுக்குள் இவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் மதுரைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

ஆனால் அக்கூட்டம் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதுவரை அமைச்சர்களும், அதிகாரிகளும் அதற்குரிய நடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை. அதனால் உள்ளூர் பக்தர்களும், மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலா சார்ந்த வியாபாரிகளும் அதிருப்தியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்